புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டு (2015) வாழ்த்துக்கள்


தமிழர்களுக்கு புத்தாண்டு என்றாலே அது 'தை' திங்கள் முதல் நாளான உழவர் திருநாள் தான் என்பது எனது நிலைப்பாடு. ஆனாலும் உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பரவசமாக வரவேற்கும்போது நாமும் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில் தவறேதும் இல்லை.

ஆகவே, பதிவுலக உறவுகள் 
மற்றும் 
முகநூல் நண்பர்கள் 
அனைவருக்கும் எனது உளம் கனிந்த 
புத்தாண்டு (2015 ) நல்வாழ்த்துக்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

சென்ற மாதம் கடவுச்சீட்டு பெறுவது சம்பந்தமாக சொந்த ஊர் செல்ல நேரிட்டது. எப்போதுமே இரயிலில் முன்பதிவு செய்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். வாராந்திர இரயிலான சந்திராகாச்சி-திருவணந்தபுரம் இரயிலில்தான் எனக்கு இடம் கிடைத்தது. பொதுவாக இரயில் பயணங்களில் யாருடனும் பேசுவதும் பழகுவதும் கிடையாது. பக்கவாட்டு மேல் படுக்கையத்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஏனென்றால் சாப்பட்டு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் படுத்துக்கொண்டோ/தூங்கிக்கொண்டோ  செல்லலாம்.

தமிழர்கள் என்றாலும் கூட நான் பேசுவதில்லை. வெட்டி அரட்டையோ பயனில்லாத பேச்சுக்களையோ நான் விரும்பாததும் ஒரு காரணம். அரிதாக சிலரிடம் பேசுவதுண்டு. அப்படித்தான் அன்று ஒரு தமிழரைப் பார்க்க நேர்ந்தது. சுமார் 55 வயதிருக்கும். சரளமாக ஹிந்தி பேசினார். எங்கே போகிறீர்கள் என்று பேச்சு கொடுத்து தன்னைப் பற்றி விவரிக்கலானார். அருகிலுள்ள பாலாசூர் என்ற இடத்தில் துணி வியாபாரம் செய்கிறாராம். ஒவ்வொரு இடமாகச் சென்று 'ஆர்டர்கள்' எடுத்து பின்பு தமிழ் நாட்டலிருந்து மொத்தமாக சரக்கை அனுப்புவதாகச் சொன்னார். இப்போது ஈரோடுக்கு பயணமாகிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நிலையத்திலும் இரயில் நிற்கும் போதெல்லாம் அவருடைய உடைமைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எதையாவது வாங்கப்போவார். தமிழ்நாட்டிலிருந்து இப்படி பலர் கூட்டமாக சேர்ந்து துணிமணிகளை மொத்தமாக கொண்டுபோய், அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வருவதாகச் சொன்னார். வியாரம் என்றால் கடை வைத்து அல்ல. ஆளுக்கு ஒரு சைக்கிளில் துணிகளை எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாக கிளம்பி விடுவார்களாம்.

ரொக்கமாக விற்காமல் தவணை முறையில்தான் அவர்களின் வியாபாரம் இருக்குமாம். கிராமத்து வாசிகள் எல்லாருமே மிகவும் நாணயமானவர்கள் தானாம். பணம் ஒழுங்காக வசூலாகிவிடுமாம். இரண்டு மூன்று மாதம் இப்படித் தங்கி வியாபாரம் செய்துவிட்டு, ஊர்ப்பக்கம் வந்து கொஞ்சம் தலை காட்டி விட்டு மீண்டும் கிளம்பி விடுவார்களாம். கிட்டத்தட்ட மாதம் நாற்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்று சாதாரணமாகச் சொன்னார். நம்மவர்களின் உழைப்பையும், எங்கிருந்தோ வந்த வேற்று மொழிக்காரர்கள்தானே என்ற பாகுபாடில்லாமல், ஏமாற்ற நினைக்காமல் பணத்தை ஒழுங்காக திருப்பிக்கொடுக்கும் மக்களையும் நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் ஒன்று அன்று நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இரயில் நின்றதும் பலர் நானிருந்த பெட்டிக்குள் ஏறி காலியாக இருந்த இருக்கைகளை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டனர். என்னுடைய இருக்கைக்கு அருகே ஒரு முப்பந்தைந்து அல்லது நாற்பது வயதான பெண்மணியும் அவரது தாயாரும் அமர்ந்தனர். பின்னர் ஆளுக்கு ஒரு இருக்கையில் படுத்துக் கொண்டனர். பின் என்ன நினைத்தாரோ எழுந்து என்னிடம் இந்த ரயில் சென்னைதானே போகுது என்று தெலுங்கில் கேட்டார்.

நான் இல்லை, இது கேரளா போகும் வண்டி. சென்னை போகாது என்றேன். என்னை ஏளனமாகப் பார்த்து, (என்னை ஏமாத்தப் பார்க்கிறியா? என்கிற ஏளனம்...) இது சென்னை போகிற வண்டிதான் என்று பதில் போடு போட்டார். நான் மீண்டும் சொன்னேன், இது சென்னை போகாது, கூடுரில் பாதை மாறி ரேணிகுண்டா, காட்பாடி வழியாக திருவணந்தபுரம் செல்கிறது என்றேன். அவர் இதை நம்பத் தயாராக இல்லை. என்னை நோக்கி... நீங்க எங்க போறிங்க என்றார். நான் காட்பாடி என்றேன். காட்பாடி எங்கே இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

எந்தக் கவலையுமின்றி மீண்டும் தாயும் மகளும் படுத்துத் தூங்கத் தொடங்கினர். 'சாய்வாலா' ஒருவன் வந்தான். எழுந்து டீ வாங்கிக் குடித்துக் கொண்டே அவனிம் இந்த வண்டி சென்னை போகிறதா? என்று அவனிடமும் கேட்டனர். நிற்கிற வண்டியிலெல்லாம் ஏறி வியாபாரம் செய்கிறவனுக்கு எந்த வண்டி எங்கே போகிறது என்ற விவரமா தெரியும்?! அடுத்த ரயிலைப் பிடிக்கிற அவசரத்தில் ம்... போகுது, என்ற ஒன்ற்றைச் சொல்லோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அந்தப் பெண்மணியோ நான் பொய் சொல்லி விட்டதாக என்னைப் பார்த்து முறைப்போடு ஒரு பார்வை பார்த்தார். நான்  நம்பாவிட்டா போயேன்... என்று பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அரை மணி நேர பயணத்திற்குப்பின் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்தார். ஒவ்வொருவரிடமும் பயணச்சீட்டைப் பரிசோதித்த அவர், அவர் இறுதியில் அந்த தெலுங்குப் பெண்மணிகளிடமும் விசாரித்தார். அவர்களிடம் இருந்தது முன்பதிவு செய்த சீட்டு அல்ல. சாராரண வகுப்பில் பயணம் செய்யும் சீட்டை வாங்கிவிட்டு முன்பதிவு செய்த இருக்கையில் அட்டகாசமாக அமர்ந்து வந்த அவர்கள் அப்பாவியாய் பரிசோதகரிடம் சீட்டை நீட்டினர். அப்போது அவர் எங்கே போகிறீர்கள்? ஏனிந்த பெட்டியில் ஏறினீர்கள் என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தார்.

சென்னை போகிறோம் என்று சொன்னதும் இது சென்னை போகாது. கூடூரில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி முன் பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்ததற்கான அபராதமாக நூறு ரூபாயும் (ரசீது இல்லாமல்தான்) வசூலித்துக் கொண்டார். அவர் போனதும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! எனக்கோ பரிதாபம் ஒரு பக்கம் சிரிப்பு ஒரு பக்கம். என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார்கள். இரயில் நெல்லூர் ரயில் நிலையத்தை அடைவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன் சிக்னலுக்காக நின்றது. இந்த இரண்டு பெண்மணிகளும் என்ன நினைத்தார்களோ தீடீரென ரயிலிருந்து கீழே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டனர்.

அவர்களுக்கு அவமானமாகப் போயிருக்கும் என நினைக்கிறேன். பயணங்களில் யாரையும் நம்பக் கூடாதுதான். அதற்காக இப்படியா? சரியாக விசாரிக்காமல் இந்த ரயிலில் ஏறியது முதல் தவறு. அதில் பயணம் செய்பவர்கள் எங்கே போகிறது என்று சொன்ன பிறகும் நம்பாதது இரண்டாவது தவறு. ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்காமல் இப்படி நடு வழியில் இறங்கியது மூன்றாவது தவறு.

ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு நேரத்தோடு சென்னை சென்று சேர வேண்டிய இவர்கள், இப்படி தவறுக்கு மேல் தவறு செய்தும் அதை உணராமல் மாலை மங்கிய நேரத்தில் நடு வழியில் இறங்கி அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கோ அல்லது இரயில் நிலையத்திற்கோ நடந்து சென்று அடுத்த இரயிலைப் பிடித்து எப்போது எத்தனை மணிகு சென்னை போய்ச் சேர்வார்கள்? என்ன மனிதர்கள் இவர்கள்? சக மனிதனை, சக பயணியை நம்பாதவர்கள்!?

வீடு போய்ச்சேரும் வரை இவர்கள் நினைப்பாகவே இருந்தது. என்னை இவர்கள் ஏன் நம்பவில்லை என்பது புதிராகவே இருந்தது! உறவினர்களும் கைப்பேசியில் இவர்களை வழி நடத்தியிருக்கலாம். (யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டனர்.) இவர்களுக்கு ஹிந்தி, தெலுங்கு கூடவே தமிழும் தெரிந்திருந்தது. ஆனால் பொதுவில் எப்படி யாருடன் பழகுவது, யாரை நம்புவது என்ற அடிப்படைப் பாடத்தைக் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

வியாழன், 25 டிசம்பர், 2014

அப்பா வேணாம்ப்பா.......




சினிமாவில் எத்தனையோ பரிதாப கதையை பார்த்து இருப்பீர்கள் ஆனால் சமூக நல சிந்தனையோடு வெங்கட்ரமணன் எடுத்த அப்பா வேணாம்பா என்ற படத்தின் பரிதாப கதையைபற்றி கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்

கொஞ்சம் கேளுங்களேன்...
சினிமா என்பது மகத்தான மீடியம் இதன் மூலம் வலுவான கருத்து சொல்லமுடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் பார்த்த பாங்க் வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு சென்றவர்தான் வெங்கடரமணன்.

பத்து பனிரெண்டு ஆண்டு காலம் போராடிய போதும் ஜெயிக்க முடியவில்லை, ஜெயிக்க முடியவில்லை என்பதைவிட ஜெயிக்க விடவில்லை என்பதே நிஜம்.

இவர்கள் என்ன வாய்ப்பு கொடுப்பது நாமே சினிமா எடுப்போம் என்று களத்தில் இறங்கினார். கையில் இருந்தது மூன்று லட்சமும் ஒரு செவன் டி கேமிராவும்தான். இந்த பணத்தில் நாடகம் கூட போடமுடியாது என்றாலும் துணிந்து சினிமா எடுப்பது என்று முடிவு செய்து எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா...

தெருவுக்கு ஒரு குடிகாரர்கள் இருந்தது போய் இப்போது வீட்டுக்கு ஒரு குடிகாரர் இருக்கும் வேதனையான கால கட்டமிது. ஏழைத்தொழிலாளர் முதல் மாணவர் வரை டாஸ்மாக்கிற்கு சென்று காசையும் உடலையும் கரைக்கும் மோசமான சூழல் இது.

குடியால் பல குடும்பங்கள் கண் எதிரே மண்ணாகி கொண்டிருப்பதை பார்த்த வேதனையை, அவர்களுடன் பேசிப்பழகிய அனுபவத்தை விளக்கும் வகையில் எடுத்த படம்தான் அப்பா வேணாம்ப்பா படம்.

தியேட்டர் வாடகை தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு டான்ஸ் இல்லை கவர்ச்சி இல்லை மாசலா இல்லை யாருய்யா பார்க்க வருவாங்க என்று சொல்லிவைத்தார் போல எல்லா தியேட்டரிலுமே இவரை விரட்டிவிட்டனர்.

குடியின் கொடுமையை விளக்கும் படம். நியாயமாக பார்த்தால் வரிவிலக்கு கிடைத்திருக்க வேண்டும். பாதிடிக்கெட் கட்டணத்தில் மக்கள் படம் பார்த்து திருந்தி விடப் போகிறார்களே என்று நினைத்தார்களோ என்னவோ வரிவிலக்கு தரவில்லை.

சரி, தலைப்பு தமிழில் வைத்திருக்கிராரே அதற்கு ஒரு தொகை உண்டா என்று கேட்டால் அதைப் பற்றியும் பேச்சு இல்லை.

எதுவும் வேண்டாம் நான் எடுத்த படத்தை மக்கள் பார்த்து தீர்ப்பு சொல்லட்டும் என்று முடிவு செய்தால் தியேட்டர் கிடைக்கவில்லை.

கடைசியாக ஊருக்கு ஒதுக்குப்புறமான சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரில் பகல் 11 மணிக்காட்சியாக கடந்த நான்கு நாட்களாக ஒடிக் கொண்டு இருக்கிறது. அநேகமாக இன்னும் இரண்டு நாட்கள் ஒடலாம்.

படம் பார்த்தவர்கள், படம் முடிந்ததும் வாசலில் நின்று நன்றி சொல்லும் படத்தின் இயக்குனர் நடிகர் வெங்கடரமணனை கண்ணில் நீர்தழும்ப கட்டிப்பிடித்து பாராட்டுகின்றனர். ஆனால் படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கைதான் மிகவும் குறைவாக இருக்கிறது.

நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதன் காரணமாக குடும்பத்தை நட்பை உறவை இழந்து ஈமொய்க்க தெருவிலும் சாக்கடையிலும் கிடக்கும் நிலைக்கு செல்கிறார். பின்னர் திருந்தி திரும்ப பழையநிலைக்கு எப்படி வருகிறார் என்பதுதான் கதை.

குடிசைத்தொழில் அடிப்படையில் படம் எடுத்திருந்தாலும் படத்தின் தரத்தில் எந்த குறையும் இல்லை செலவை குறைப்பதற்காக இவரே நடித்து பாடல் இயற்றி பாட்டுப்பாடி இருக்கிறார். ஆனால் இவரைத்தவிர வேறுயாரும் இப்படி நடித்திருப்பார்களா என்று நினைக்குமளவிற்கு நடித்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

கிட்டதட்ட நான்கு லட்ச ரூபாய்க்குள் படத்தை எடுத்து முடித்தாலும் அதன்பிறகு படமாக வெளியில் கொண்டுவருவதற்குள் பத்து லட்சமாகிவிட்டது. கடன்பட்டும் கஷ்டப்பட்டும் படத்தை தயார் செய்தாலும் எந்த தியேட்டரிலும் இந்த படத்தை ஓட்டுவதற்கு முன்வரவில்லை.

இந்த படத்தை மது குடிப்பவர்கள் மற்றும் மது குடிக்காதவர்கள் என அனைவருமே பார்க்க வேண்டும்.

எப்போதாவது குடிக்கலாம் விழாக்களில் குடிக்கலாம் சந்தோஷத்திற்கு குடிக்கலாம் என்று குடிக்காதவர்களை சுற்றிசுற்றி வந்து கும்மியடித்து குடிக்கவைக்க நடக்கும் முயற்சியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

குடி என்பது ஒரு நோயே அதில் இருந்து விடுபடுவது மிகவும் எளிது எப்படி என்பதை தெரிந்து கொள்ள குடிப்பழக்கம் உள்ளவர்கள் நண்பர்களுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

பத்து லட்ச ரூபாய் செலவில் ஒரு சினிமாவை சுவராசியம் குறையாமல் எடுக்கமுடியுமா என்ற கேள்வியை மனதில் தேக்கி வைத்துக்கொண்டுள்ள கலைஞர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

சம்பாதிக்க துவங்கிவிட்ட மகனிடம் குடியின் பக்கம் போய்விடாதே என்று எப்படிச் சொல்வது என தயங்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் இந்த படத்தை பார்க்கலாம்.

இந்தப் படத்தை உங்கள் ஊர் தியேட்டரில் ஒட்டி உங்கள் ஊருக்கு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறீர்களா ஒரு ஃபோன் போடுங்கள் வெங்கடரமணன் படப்பெட்டியுடன் வந்துவிடுவார்.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் என்று கூட சொல்ல மாட்டேன் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு கூட இந்த படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு நேரிலோ அல்லது போனிலோ ஒரு வார்த்தை பாராட்டுங்கள் காரணம் வெங்கடரமணன் போன்ற போராளிக் கலைஞர்கள் நாட்டுக்கும் நமக்கு தேவை.அவரது போன் எண்: 9444388107.
நன்றி; தினமலர்  

புதன், 24 டிசம்பர், 2014

ஈ.வெ.ரா.பெரியார் - எம்.ஜி.ஆர். - கே.பாலச்சந்தர்

தந்தை பெரியார்

இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலே ஒரு மிகப் பெரிய புரட்சியை, விழிப்புணர்வை ஏற்படுத்திய உன்னத மனிதர். இவரின் கடவுள் மறுப்பையும், பிராமண எதிர்ப்பையும் மட்டுமே விமர்சிப்பவர்கள் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தன் வாழ்நாளின் கடைசி வரை போராடியதை மறுக்க மாட்டார்கள். ஒரு தலைமுறையே தலை நிமிர்ந்து நிற்க வழி வகுத்தவர். இவர் போட்ட பாதையில் பயணித்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. பகுத்தறிவு என்ற வார்த்தையை புழக்கத்தில் கொண்டு வந்தவர். 

காலங்காலமாக ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் பின்பற்றி வந்த சடங்கு சம்பிரதாய பழக்க வழக்கங்களை கேள்வி கேட்டு திணறடித்தவர். பழம் பெரும் இதிகாசங்களில் உள்ள ஆபாசங்களை போட்டுடைத்தவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பெருமை என நினைக்க வைத்த பெருந்தகையின் நினைவு நாள் இன்று. அவருக்கு எனது வணக்கத்துக்குரிய நினைவஞ்சலி!

எம்.ஜி.ஆர்.

நடிகனும் நாடாளலாம் என்பதை நாட்டிற்கு உணர்த்தியவர். ஏழைப்பங்காளர். மக்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்தவர். தன்னுடைய திரைப்படங்களில் நடிப்பிற்காகக் கூட தவறான செய்திகளைச் சொல்லாதவர். அவர் மறைந்து ஒரு புதிய தலைமுறை தோன்றிய பின்பும் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருப்பவர். அரசியலில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகினாலும் கடைசிவரை தன்னுடைய பிம்பத்தை இழக்காதவர். தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தும் தன் உற்றார் உறவினர்களை ஒரு எல்லைக்குள் வைத்திருந்தவர். மரணத்தின் போது அவருக்கிருந்தது ராமாவரம் தோட்ட வீடும், சத்யா படப்படிப்பு நிலையமும், அ.தி.மு.க. என்ற கட்சியும் மட்டும்தான்.

அதன் பிறகு கட்சியை தன் வசப்படுத்தியவர்கள் இன்று அதை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஊழலுக்கு எதிராக தனிகட்சி தொடங்கினாரோ அதே ஊழலில் தமிழகமே வெட்கித் தலைகுனியும் நிலையில் கட்சியின் தலைவரே தமிழக முதல்வரே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று 'கைதி'யனதும் அந்த மக்கள் தலைவரின் பெயருக்கு ஏற்பட்ட மாபெரும் களங்கமாகும். பெரியாரின் நினைவு நாளிலே உயிர் துறந்து அவரோடு சேர்த்து என்றென்றும் நம் நினைவில் நிழலாடும் மக்கள் திலகத்திற்கு மனமார்ந்த நினைவஞ்சலி.

கே. பாலச்சந்தர்

நேற்று மறைந்த திரையுலப் பிதாமகன் பாலச்சந்தர் அவர்களைப் பற்றி தனிப்பதிவுதான் போடவேண்டும். வெறும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை மட்டுமே பார்த்துப் பழகிய காலகட்டங்களில் மாற்று சினிமா என்ற புதுமையை புதியவர்களை வைத்து எடுத்து சாதித்துக் காட்டியவர். இவர் இயக்கிய படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 'நிழல் நிஜமாகிறது'. திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டிய படங்கள், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள், பட்டிணப் பிரவேசம், அழகன், சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி போன்றவை. 

இவரின் தொலைக்காட்சித் தொடரான இரயில் ஸ்நேகம் இன்றுவரை மறக்க முடியாதது. முடிந்த வரைக்கும் சமூகக் கருத்துக்களையும், சக மனிதர்களின் பிரச்னை மிகுந்த வாழ்க்கையையும், பெண்ணின் மன உணர்வுகளையும் காட்சிப்படுத்திய வகையில் இவரும் ஒரு புரட்சியாளரே! தென்னிந்திய திரையுலக ஜாம்பவான்களில் முக்கியமானவராகத் திகழ்ந்த அன்னாருக்கு அஞ்சலியையும், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

கல்விக்கூடத்தின் தரம் எதைப் பொறுத்தது?



(சென்ற பதிவின் தொடர்ச்சி....)
வெளி மாநிலத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராகக் கூட வாழாத நகரத்தில் இருக்கும் பள்ளியில் தமிழையே இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்திருக்கலாமே என்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் முடியாது ஹிந்திதான் என்கின்றனர். இதை யாரிடம் போய் சொல்லி அழுவது! ஆசிரியர்கள் என்னும் போர்வையில் அரை வேக்காடுகளை வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தப் பள்ளியில் மகளை சேர்க்கக்கூடாது என்று முடிவெடுத்து வெளியேறினேன்.

அதற்கு மேல் உள்ள பள்ளி முதல்வரை சந்தித்திருக்கலாம்தான். ஆனால் மக்கள் முதல்வர்அளவுக்கு பந்தா காட்டுபவர்களிடம் எதற்கு கூழைக்கும்பிடு போட்டு தேவுடு காக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்துவிட்டது. இந்தப் பள்ளியில் இடமே கிடைக்காது என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்ததினால் நானும் நல்ல பள்ளியாகத்தான் இருக்கும் என்று நம்பியிருந்தேன். நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே சேர்த்து பள்ளியின் பெயரை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிறகுதான் புரிந்தது.

அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு பள்ளியை அணுகிணேன். அதுவும் கிறித்துவ நிறுவனம் நடத்தும் பள்ளிதான். பள்ளியைப் பற்றி அத்தனை நல்ல பெயர் இல்லை. ஆசிரியர்களின் தரத்தை வைத்துத்தானே பள்ளியின் சிறப்பு இருக்கிறது. கட்டிடத்தை வைத்து அல்லவே. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பள்ளியின் முதல்வர் ஒரு கன்னியாஸ்திரி. புதிதாக சேர்ந்த பிள்ளைகளை வரிசையில் நிற்க வைத்து அணி பிரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பள்ளி முதல்வர்தான் வழிநடத்திக் கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரம் காக்க வைக்கிறார்களே என்கிற எரிச்சல் கூட வந்தது. ஆனால் அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் அழைத்தார் விபரம் சொன்னேன். மதிப்பெண் பட்டியலைக் காட்டியதும் உடனடியாக இடம் தர ஒப்புக்கொண்டார். மொழிப்பாடம் குறித்து கேட்ட போது ஹிந்தி படித்துவிட்டு தமிழ் எப்படி முடியும் என்றார். ஒன்பதாம் வகுப்புவரை தமிழ்நாட்டில் படித்ததைக் கூறினேன். தமிழில் ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதச் சொன்னார். எழுதிக்காட்டினாள். பள்ளியில் இடம் உறுதியாயிற்று.

வேறு பள்ளியே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. வீட்டிற்கு அருகிலேயே ஒரு அரசினர் மேனிலைப் பள்ளி. இது நான் படித்த பள்ளியும் கூட. ஆனால் இன்றைய அதன் நிலைமையைக் கேட்ட பிறகு அதில் மகளைச் சேர்க்க மனம் ஒப்பவில்லை. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஒரு அரசினர் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு அதே வகுப்பில் பத்தாம் வகுப்பு மாணவனால் ஏற்பட்ட கொடூரத்தையும் படிக்க நேர்ந்தது. இதுதான் இப்போதைய அரசு பள்ளிகளின் நிலை. 
 
மற்றுமொரு பள்ளி 2 கி.மீ. தொலைவில்ஒரு காலத்தில் என் வகுப்புத் தோழிதான் அங்கு பள்ளி முதல்வர். அந்த பள்ளி மீதும் எனக்கு அத்தனை நல்ல அபிப்ராயம் இல்லை. புத்திசாலி பிள்ளைகள் எங்கு படித்தாலும் நன்றாகத்தானே படிப்பார்கள். ஆனாலும் பள்ளியின் ஒழுக்கம், கட்டுப்பாடு, மாணவ மாணவிகளின் பாதுகாப்பு என பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது இல்லயா?

கல்வி என்பது வியாபாரமாகி பல வருடங்களாகி விட்டது என்றாலும், சில கல்வி நிறுவனங்கள் தரத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தன. ஆனால் தற்பொதையை சூழலில் வருமானம் ஒன்றே அவர்களின் இலக்கு. ஆசிரியர்களின் தரமோ கேவலமாக இருக்கிறது. மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், நன்னெறிகளையும் போதிக்கக் கூடியவர்களாகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்

ஆனால் குறைந்த ஊதியத்தில் அரைகுறை படித்தவர்களை ஆசிரியர்களாக்கி பொது அறிவோ, வழிகாட்டும் திறனோ இல்லாதவர்களைத்தான் பள்ளி நிர்வாகங்கள் வேலைக்கமர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் ஏதோ ஒன்றில்தான் நம் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழ்நாட்டில் தமிழ் படிக்கும் வாய்ப்பை மறுத்த பள்ளி நிர்வாகம்!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து ஒடிஸாவிற்கு குடும்பத்தை இடம் மாற்றியிருந்தேன். ஜூலை மாத இறுதி என்பதால் குறிப்பிட்ட சில பள்ளிகளில் என் இளைய மகளுக்கு (ஒன்பதாம் வகுப்பில் சேர) இடம் கிடைக்க வில்லை. பிரபலமான பள்ளிகளில் சேர்க்கை முடிந்து வகுப்புகள் ஆரம்பமாகியிருந்தது.


மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது கல்வித்துறையிலிருந்து சான்றிதழ் வேறு கொண்டு போகவேண்டும் என்று யாரோ சொன்னதன் பேரில் (என் மகள் படித்த பள்ளியிலோ இதைப்பற்றிய எந்த தகவலையும் உறுதியாக சொல்லத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்) அலைந்து திரிந்து அங்கு போய்க் கேட்டபோது, பத்தாம் வகுப்புக்கு மேல் என்றால்தான் சான்றிதழ் தேவை. ஒன்பதாம் வகுப்பு என்பதால் அவசியமில்லை என்றார்கள்

ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டம் கொண்ட பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்வதாக சொன்ன பிறகே சென்னையிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கினேன். அதன் பிறகு அந்த பள்ளிக்குச் சேர்க்கைக்காக சென்ற போது கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். என் மகள் சென்னையில் படித்த பள்ளியும் சி.பி.எஸ்.. பள்ளி என்று நினைத்தார்களாம். மெட்ரிக் பாடதிட்டம் என்று இப்போது சொல்கிறீர்களே என்றார்கள்.

முக்கியமாக இரண்டாவது மொழிப்பாடமாக எதை எடுப்பது என்பதில் பிரச்னை. ஹிந்தியைத் தேர்வு செய்ததும், எப்படி அவளால் படிக்க முடியும்? படிக்கத்தெரியுமா? எழுதத் தெரியுமா என்றேல்லாம் கேள்விகள். ஏனென்றால் தமிழகத்தில் படித்த பள்ளியில் இரண்டாவது மொழிப்பாடம் தமிழ்தான். (ஐந்தாவதிலோ ஆறாவதிலோ ஒரு ஆண்டு ஹிந்தியை படிக்க முயன்று வேண்டாம் என்று ஒதுக்கியிருந்தாள்). இப்போது சமாளித்துக் கொள்வேன் என்று சொன்னாலும் எப்படி முடியும்? எங்கே... இதை வாசித்துக் காட்டுஎன் கேள்விக்கு ஹிந்தியில பதில் சொல்லுன்னு ஒரே தொணதொணப்பு. கடைசியாக சேர்க்கைகாக நான் முதலில் அணுகியவரைப் பார்த்து மகளை பள்ளியில் சேர்த்தாயிற்று.


சில நாட்கள் கழித்து வகுப்பெடுக்கும் போது பள்ளியின் தலைமை ஆசிரியை நீ தமிழையே இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்திருக்கலாமே என்று மகளிடம் என்று கூறியிருக்கிறார். இதை மாலையில் வந்து அவள் என்னிடம் வந்து சொன்னபோது எனக்கு வியப்பாக இருந்தது. உடனே மாற்றிக்கொடுக்க கேட்கிறதுதானே என்றேன். ஏற்கனவே காலதாமதாக சேர்ந்த்தினால் இனி முடியாது என்றிருக்கிறார்

எப்படி இது சாத்தியம் என்று மகளிடம் கேட்டபோதுதமிழை இரண்டாவது மொழிப்பாடமாக எடுத்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. னால் இங்கு தமிழ் கற்பிக்க யாரும் இருக்க மாட்டார்கள். பாடப் புத்தகத்தை (தமிழகத்தில்)வாங்கி வீட்டில் படித்துக்கொள்ள வேண்டும் என்றாள். 

ஆரம்பத்தில் சேர்க்கைக்காக அணுகிய போது இதைச் சொல்லியிருந்தால் என் மகளுக்கு ஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. சரி விடுப்பா… ஹிந்தி கத்துக்கிறதும் நல்லதுதானே! தமிழ்தான் உனக்கு ஏற்கனவே தெரியுமே என்று சமாதானப்படுத்தினேன். எப்படியோ இரண்டு வருடங்களில் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவியுடனும், தனிவகுப்பு எடுத்தும் ஹிந்தி ஓரளவிற்கு கற்று தேர்வெழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டாள்.

பிள்ளைகளின் மேற்படிப்பு இங்கு சரி வராது என்று எனது குடும்பத்தை ஒடிஸா மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு (வேலூர்) மாற்ற முடிவெடுத்தேன். வேலூரில் +2 சேர்க்கைக்காக நான் அணுகிய அந்தப்பள்ளி சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு கிறித்துவ நிறுவனம் நடத்தும் பிரபலமான பள்ளி அது. மகளின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்ததும் பள்ளியில் இடம் தருவதாக ஒப்புக்கொண்டனர். மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிப்பதற்கான இடப்பெயர்வு (Migration certificate) சான்றிதழை பின்னர் தருவதாகக் கூறியதற்கும் ஒப்புக்கொண்டனர். 

ஆனால் சேர்க்கையின் போது சி.பி.எஸ்.இ. பள்ளியிலிருந்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ப்பதற்கு சி.பி.எஸ்.இ. பிராந்திய அலுவலகத்திலிருந்து ஒப்புகை வாங்கி வரவேண்டும் என்றார்கள். பிராந்திய அலுவலகம் எங்கே என்பதைப் பற்றியோ, சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்திலா அல்லது புவனேஸ்வரத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திலா என்ற எந்த தகவலையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதாவது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒடிஸாவில் மகள் படித்த பள்ளியிலும் இதைப் பற்றி ஒரு விவரத்தையும் சொல்லவில்லை. 

சரி, அதையும் வாங்கி வந்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். பிறகு இரண்டாவது மொழிப்பாடம் குறித்த பேச்சு வந்தது. என் மகள் இங்கும் ஹிந்தி படிக்க விரும்ப வில்லை. ஒடிஸாவில்தான் வேறு வழியில்லாமல் படிக்க வேண்டியதாகி விட்டது. இங்கு எனக்கு தமிழ்தான் வேண்டும். புரிஞ்சி படிச்சால்தானே நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என்றாள். ஆனால் பள்ளி நிர்வாகமோ பத்தாம் வகுப்புல இரண்டாவது மொழிப்பாடமா என்ன எடுத்தாயோ அதைத்தான் எடுத்தாகணும். தமிழ் எடுக்க முடியாதுன்னு சொன்னாங்க.

இரண்டாவது மொழிப்பாடம் எடுப்பது மாணவரின் விருப்பத்தைப் பொருத்தது என்ற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லை. அதுவும் தவிர தமிழ்நாட்டுலேயே தமிழ் மறுக்கப்படுகிறது. எனக்கு கோம் உச்சிக்கு ஏறியது. இருந்தாலும் நல்ல பள்ளியாயிற்றே கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என்று பொறுமை காத்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுலதான் இவள் படித்தாள். ஹிந்தி படிக்க சிரமப்படுகிறாள் என்றுதான் இங்கே வந்தோம், என்றேன். நிறைய விதிமுறைகள் இருக்கிறது. அது அவ்வளவு சுலபமில்லை என்றார்கள். பின்பு சில அனுபவமிக்க ஆசிரியர்களை கலந்தாலோசித்தார்கள். கடைசியில் முடியவே முடியாது என்றார்கள். கோபத்தோடு அந்தப் பள்ளியில் இருந்து வெளியேறினேன்.  

இன்னும் இருக்கு....